சென்னை:  இன்று முதல் 4 நாட்கள் விண்ணில்  அதிசயம் நிகழ்கிறது. இந்த 4 நாட்கள் ஒரே நேர் கோட்டில் 6 கோள்கள் உலா வருகின்றன. இதை பொதுமக்கள் காண பிர்லா கோளறங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, வானில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வை காண முடியும். 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் வானியல் நிகழ்வை இன்று முதல் 4 நாட்கள் கண்டு ரசிக்க, சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோள்கள் சில சந்தர்ப்பங்களில், ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நிகழும். அதன்படி, இன்று முதல் விண்ணில்,  சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய்,  யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.  இவற்றை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் காணலாம்.  இரண்டு கோளின் ஒரு பக்கத்தில் இருக்கும், மற்றவை எதிர் பக்கத்தில் இருக்கும்.  அதாவது,  சனி, வியாழன், வெள்ளி, செவ்வாய் கோள்களை வெறும் கண்ணாமல் பார்க்க முடியும் என்றாலும்,  யுரேனஸ், நெப்டியூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து,  பிர்லா கோளறங்கம் அதிகாரிகள் கூறும்போது, விண்ணில்,  கோள்கள், ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை, ‘பிளானட்டரி பரேட்’ என்கிறோம். இவற்றை, வெட்டவெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து  பொதுமக்கள் வெறும் கண்களால் காணலாம். இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழாது. கடந்த 2022 ஜூனில், ஐந்து கோள்கள் நேர்கோட்டில் வந்தன. தற்போது, ஆறு கோள்கள் வருகின்றன.

 இவை கிழக்கு – மேற்காக காணப்படும். நட்சத்திரங்கள் போல் மின்னாது. அளவில் சற்று பெரிதாக இருக்கும். அதிக பிரகாசத்துடன் காணப்படுவது வெள்ளி கோள். அதைத் தொடர்ந்து, செம்பழுப்பு நிறத்தில் செவ்வாய் கோள் காணப்படும்.

இதையடுத்து அடுத்த மாதம் 28ம் தேதி ஏழு கோள்களை பார்க்கலாம். இதையடுத்து, ஆகஸ்ட் மாத மத்தியிலும், இவ்வாறான நிகழ்வு ஏற்படும். அதைத் தொடர்ந்து, 2040ல் தான், இதுபோன்று நிகழும்.

இந்த அரிய நிகழ்வை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி, வேலுார் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள, மண்டல அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், கோள்களின் நேர்கோட்டு நிகழ்வை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், நுண்ணோக்கி வழியே காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 25ம் தேதி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை காணலாம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி,  ஜனவரி 2025 இல், இரவு வானில் ஆறு கோள்கள் தெரியும், அவற்றில் நான்கு வெறும் கண்ணால் தெரியும். அவை ஒரு நேர் கோட்டில் இருக்காது;  இந்த மாதம் முழுவதும் இருட்டிய பிறகு முதல் சில மணிநேரங்களில், தென்மேற்கில் வீனஸ் மற்றும் சனியையும், தலைக்கு மேல் வியாழனையும், கிழக்கில் செவ்வாய் கிரகத்தையும் நீங்கள் பார்க்க முடியும் என்று  தெரிவித்துள்ளது.

உங்களிடம் தொலைநோக்கி மற்றும் அவற்றைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு செயலி இருந்தால், யுரேனஸ் மற்றும் நெப்டியூனையும் நீங்கள் காணலாம்.

மேலும், இந்த நிகழ்வின்போது,  சிறப்பு எதுவும் நடக்காது, ஆனால் ஜனவரியில் வீனஸ் மற்றும் சனி நெருங்கி வரும், இது “இணைவு” என்று அழைக்கப்படுகிறது.  ஜனவரி 22 மற்றும் 23 ஆம் தேதிகளின் இரவுகளில், அவை ஒன்றுக்கொன்று ஒரு சில விரல் அகலத்தில் தோன்றும்  என்று கூறியதுடன்,  அவை இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மைல்கள் இடைவெளியில் இருக்கும், ஆனால் அவை மிக நெருக்கமாகத் தெரியும் என்று கூறியுள்ளது.