சென்னை: பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலை காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தறபோது தொற்ற பரவல் கட்டுக்குள் இருப்பதால், கல்வி நிலையங்கள் மீண்டும் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தற்போது பி.இ, பி.டேக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தொடர்ந்து செப்டம்பரில் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இளநிலை (Under Graduate) மற்றும் முதுநிலை (Post Graduate) மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.
டிசம்பர் 2-ம் தேதி செய்முறை தேர்வு நடைபெறும் என்றும், டிசம்பர் 13-ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் நிறைவடைந்த பின் அடுத்த ஆண்டுக்கான செமஸ்டர் வகுப்புகள் 2022, ஜனவரி -19-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொறியியல் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அண்ணா பலக்லைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.