சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்திய நிலையில், சிறப்பு குழுவினர் மகளிர் காவல்நிலைய பெண் எஸ்ஐ-ஐ கைது செய்துள்ளனர்
இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
அதுபோல கைது செய்யப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சதீஷ் என்ற வாலிபர் மீது புகாரளிக்கப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில், கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில், புகார் கொடுக்க சென்ற சிறுமியின் பெற்றோரை இரவெல்லாம் வைத்து விசாரித்ததுடன், அவர்களை தாக்கியதாக அண்ணா நகர் மகளிர் போலீசார் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதுடன், தமிழகத்தில் உள்ள வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற வாலிபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வட்ட செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோருக்கு வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சதீஷுக்கு சாதகமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்…
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு