புனே

பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு பிரதமர் மோடியின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை என கூறி உள்ளார்.

அன்னா ஹசாரே ஒரு புகழ் பெற்ற சமூக ஆர்வலர் ஆவார்.  புதுச்சேரி ஆளுனர் கிரண் பேடி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அரசியல் குருவும் ஆவார்.  இவர் சமீபத்தில் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை விடுத்துள்ள்ளார்.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது.

“லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து அதில் லஞ்ச ஊழல் குற்றங்களை விசாரித்து உடனடியாக தீர்ப்பளிக்க பிரதமர் மோடி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.  எனவே அவருடைய வார்த்தைகளில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.  மக்கள் நீதிமன்றங்களை மூன்று ஆண்டுகளாகியும் அமைக்க முடியாத இந்த அரசு, பல சட்ட மாற்றங்களை மூன்றே நாட்களில் இரு சபைகளிலும் விவாதிக்காமலே இயற்றுவது நகைப்புக்குறியது.

அரசின் இந்த செயல் மக்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும்.  இதைக் காணும் எந்த ஒரு குடிமகனும், பிரதமரால் ஊழலை ஒழிக்க முடியும் என எப்படி நம்புவான்?  ஆசியாவிலேயே அதிகம் ஊழல் உள்ள நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.  இனியும் பிரதமரின் வார்த்தைகளை நம்பி அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட நான் தயாரில்லை.   ஆனால் நான் அவர் நமக்களித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை எனது கடிதங்கள் மூலம் நினவு படுத்திக் கொண்டிருப்பேன்.   அப்படியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரும் வருடம் நான் மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தை துவங்க எண்ணியுள்ளேன்” என கூறி உள்ளார்.