நாமக்கல்: நாடு முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமனா ஆஞ்சநேயர் கோவிலான நாமக்கல்லில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு இன்று  அதிகாலை 1,00,008 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   வடை மாலையுடன்  பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர்களில் ஒன்றானது நாமக்கலின் மத்திய பகுதியில் அமைந்து அருள் பாலித்து வரும் ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலையானது, ஒரே கல்லில், 18 உயரத்துக்கு  பிரமாண்டமாக செதுக்கப்பட்ட சிலை. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு  தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. வேண்டுதலை நிறைவேற்றி தரும் ஆஞ்சநேயரை, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இருந்து வந்து தரிசித்தி செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  கோவிலின் நுழைவு வாயிலில் ‘ஸ்ரீஹனுமத் ஜெயந்தி’ என்ற வார்த்தை வடிவில் பூக்களை கொண்டு அலங்கார தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை , அங்கு செய்யப்பட்ட   1லட்சத்து எட்டு வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இதை பல ஆயிரம் பேர் கண்டுகளித்தனர்.இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு,  பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என 3 வழிகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.