கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும்  நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா இன்று (ஜூன்.27) தொடங்கியது. இன்று காலை வேத மந்திரங்கள் ஓதிட, மேள தாளம் முழங்கிட,  தேவாரம், திருவாசகம் பாடி கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசினம் செய்தனர்.

ஆனிதிருமஞ்சன  உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. நாளை (28-ம்தேதி) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், நாளை மறுதினம் (29ம் தேதி) தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 30ம் தேதி வெள்ளி பூதவாகனத்தில் சாமி வீதிஉலாவும், ஜூலை 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), 2ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 3ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 4ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

5ம் தேதி முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். டிஎஸ்பி.ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.