கோவை:

நீட் காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க முடியாத காரணத்தால் மனம் உடைந்த மாணவி அனிதா தற்கொலை கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது.

கடைசிவரை தமிழகத்திற்கு விலக்கு உண்டு என்று கூறி வந்த மத்திய மாநில அரசுகள் கடைசி நேரத்தில் காலைவாரியதால் இன்று அநியாயமாக ஒரு மாணவி தற்கொலை முடிவை நாடியுள்ளார்.

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மாணவர் அமைப்பினர், எதிர்க்கட்சி யினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்து,  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் இழுத்து சென்று கைது செய்த போது, இருதரப்பின ருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் அருகே உள்ள மேம்பாலத்தில் மாணவ அமைப்புகள் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.  அனிதா தற்கொலை காரணமாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமென குற்றம்சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

திருவல்லிக்கேணி அரசு மருத்துவக்கல்லூரி அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் மன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே திண்டிவனத்தில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.