அரியலூர்:

1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத விரக்தியில் தலித் மாணவி அனிதா பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டார்.

அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசின் வஞ்சகத்தாலும், தமிழக அரசின் கையலாகாத தனத்தாலும் மாணவி அனிதா தற்கொலை முடிவை நாடியுள்ளதாக  அரசியல் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் வெகுண்டு எழுந்துள்ளன. நேற்றே பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இன்றும் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த மாணவி அனிதாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமானோர் அரியலூர் பயணமாகி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி அனிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,  அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திமுக, காங்கிரஸ், விசிக சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 5000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் பொது மக்கள், அரசியல் கட்சியினர் கூட்டம் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.