சென்னை,

த்திய மாநில அரசின் வஞ்சகத்தால் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ கனவு தகர்ந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் இருந்து நீட் அடியோடி விரட்டப்பட வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் விவகாரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் மன்றத்தி னர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது முதலமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதை அடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் விலக்களிக்கக் கோரியும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நீட் தேர்வில் விலக்கு பெற தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.

அதேபோல், அனிதாவின் தற்கொலையையடுத்து, சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னையிலும் கடற்கரையில்  போராட்டம் நடைபெற இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் இரவில் இருந்தே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.