நீட் தாக்கம் குறித்து ஆராயும் நீதிபதி ராஜன் குழுவுக்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்…

Must read

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழகஅரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவுக்கு  நீட் தேர்வு காரணமாக தனது மருத்துவ கனவை இழந்த மாணவி அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“வணக்கம், என் பெயர் த.சண்முகம். நான் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். இன்றுவரை எங்கள் ஊருக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. நான் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவன்.

எனது 16 வயது முதற்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறேன். எனக்கு 1988ல் திருமணமாகியது. பெண் குழந்தை வேண்டும் என்று தொடர்ச்சியாக நான்கு ஆண் குழந்தைகள். எங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்று கோயில்கள் தோறும் சென்று வரம் வாங்கி 05/03/2000 அன்று அன்பு மகள் அனிதா பிறந்தார். 2000 ஆண்டு எண்ணிக்கையில் எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத ஆண்டு. எனக்கும் மகள் பிறந்ததால் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

நானும் என் மனைவியும் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது. நாங்கள் எவ்வளவு வறுமையில் இருந்தாலும், என் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்று நானும் என் மனைவியும் எங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் பிள்ளைகளின் கல்விக்காக மட்டுமே செலவழித்தோம்.எங்கள் பிள்ளைகளும் வறுமையிலும் கல்வியை நிறுத்தாமல் தொடர்ந்து கற்று வந்தனர்.

இந்த நிலையில் எனது மகள் அனிதா இரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவரது தாயார் (எனது மனைவி) இறந்து விட்டார். நான் பிழைப்புத்தேடி திருச்சி காந்தி மார்க்கெட் சென்றுவிடுவதால் என் மகளும், நான்கு மகன்களும் எனது தாயின் (அவர்களின் பாட்டி) அரவணைப்பிலேயே கட்டி முடிக்கப்படாத வீட்டில் வசித்து வந்தார்கள். எனது நான்கு மகன்களையும் மூட்டை தூக்கித்தான் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தேன்.

எனது மகள் அனிதா சிறுவயதிலிருந்து டாக்டருக்கு தான் படிப்பேன் என்று உறுதியுடன் படித்து வந்தார். பத்தாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அனிதா வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 478/500 (தமிழ்-96, ஆங்கிலம்-83, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99) மதிப்பெண்கள் பெற்றார்.

வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததாலும், வீட்டிலிருந்து படித்தால் வீட்டு வேலைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுமென்பதாலும் அவரின் மருத்துவ கனவிற்கு தடையேதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எங்கள் விவசாய நிலத்தை அடகு வைத்து, அருகாமை கிராமத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் சலுகைக் கட்டணத்தில் சேர்த்தோம். அந்த இரண்டு ஆண்டுகளும் எந்த கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் தனது டாக்டர் கனவுக்காக முழுமூச்சுடன் படித்து வந்தார்.

1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவிற்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என மறுத்துவிட்டு நீட் தேர்வில் 720க்கு 150 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தவர்கள் பணம் இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுவதாக அனிதாவின் தந்தை சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதா , அப்படி பாதிப்பு உள்ளதெனில் அதற்கான மாற்று வழிகள், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சட்ட வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு கடந்த 10ம் தேதி அமைக்கப்பட்டது.

நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் மெயில் அனுப்பலாம் என அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை சண்முகம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.வீட்டின் வறுமையை தாண்டி அனிதா 12ம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றதாகவும் அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலை சிறந்த 2 மருத்துவ கல்லூரிகளில் பயில்வதற்கு போதுமானது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் நீட் தேர்வு வந்ததால் அனிதா மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனக் கூறியதால் அனைத்து தரப்பிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தனது மகளும் தாங்களும் துடிதுடித்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கான போட்டியிலும் வாய்ப்பிலும் அனிதா போன்றவர்கள் முழுமையாக புறக்கணிக்கும் நிலையை அவர்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அனிதாவின் தந்தை சண்முகம், உணவுக்கு ரேஷன் கடைகளையே நம்பி இருக்கும் தங்களிடம் பல லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் செல்வதற்கு வசதியும் இல்லை, படிப்பதற்கு வசதிகளும் அருகாமையில் இல்லை என்று கூறியுள்ளார்.

12ம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற அனிதாவால் நீட் தேர்வில் ஏன் மதிப்பெண் பெற முடியவில்லை என்று கேள்வி கேட்கும் நீட் ஆதரவாளர்களிடம் தான் ஒரு கேள்வி எழுப்ப விரும்புவதாக கூறியுள்ள அவர், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களால் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை என எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் படித்த பாடத் திட்டத்திலும் பயிற்சி பெற்ற தேர்வு முறையிலும் அனிதா சாதித்ததாகவும் மாநில அரசு நடத்திய தேர்வு எழுதி அதற்கு மாநில அரசே வழங்கிய மதிப்பெண்களும் அர்த்தமற்று போனதால் அனிதா உயிரை மாய்த்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் சண்முகம் கூறியுள்ளார்.

என் மகள் அனிதாவின் போராட்டங்கள் அனைத்தும் அவரைப் போன்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கானது. அதை உச்சநீதிமன்ற வளாகத்திலே ஊடகங்கள் முன்பு தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அவரின் இறப்பிற்கு பிறகும் நீட் தேர்வால் 13 குழந்தைகள் இறந்துள்ளனர்.மாணவர்களின் உயிரைக்குடிக்கும் நீட் தேர்வை இரத்து செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப(கிராமப்புற மாணவர்களின் உள் இட ஒதுக்கீட்டோடு) இட ஒதுக்கீடு வழங்கினால் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசுப்பள்ளிகளும் மேம்படும். இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், எங்களின் வழக்கறிஞருடன் நேரில் வந்து சமர்ப்பிப்பதற்கும் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

More articles

Latest article