ஹுப்ளி: கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளான பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர், உடனடி நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

வட கர்நாடகாவின் உத்திர கன்னடா தொகுதியின் பாரதீய ஜனதா உறுப்பினர் ஆனந்த் குமார் ஹெக்டே. இவருடைய தொகுதியில் உள்ள பைஹோங்கல் தாலுகாவில் அமைந்த நெகினஹால் கிராமத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மலப்பிரபா நீர்த்தேக்கமே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், அக்கிராமத்திலுள்ள மக்கள் மலேரியாவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எம்.பி. ஆனந்த் குமாரிடம் மக்கள் முறையிட்டு உடனடி உதவி கோரியதாகவும், ஆனால் அவர் தரப்பிலிருந்து உத்தரவாதம் எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அவர் தாமதமாகவே வந்து பார்வையிட்டதாக குற்றம் சாட்டிய மக்கள், அவர் மீது கோபக் கணைகளை வீசினர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் பார்வையிட்ட ஆனந்த் குமார், தன்னிடம் அதிகாரிகள் முறையான தகவலை தெரிவிக்கவில்லை என்று அவர்களின் மீது கோபத்தைக் காட்டினார். தற்போது தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.