ராஜபாளையம்,
ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை தினமணி நாளிதழில் எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாத தாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமான முள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்றும் ஒரு இடத்தில் எழுதியுள்ளார்.
இதற்கு சான்றாக அமெரிக்காவின் நூலை மேற்கோள் காட்டியிருந்தார். இதையே ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் பேசினார்.
அவரது பேச்சு குறித்து பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக விமர்சித்தார். மேலும் இந்து அமைப்பு களும் கண்டனங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தான் மேற்கோள் கூறிய கருத்து, எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்தும், வைரமுத்து மீது வீசப்படும் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், வைகோ, சீமான், கம்யூனிஸ்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது இந்து முன்னணி நகர செயலாளர் சூரி கொடுத்த புகாரின் பேரில் 153 (A), 295 (A), மற்றும் 505 (part II) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.