சென்னை:  தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,.

இந்த மாதம் நடைபெற  உள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தமிழ்நாடு அரசின் 2023-24 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

வேளாண் பட்ஜெட் குறித்து, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று சென்னையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கருத்துக்கேட்பு கூட்டம்  அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில்  நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தா.மோ .அன்பரசன், சக்கரபாணி, நாசர், அனிதாராதாகிருஷ்ணன், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.