பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை யானை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
பந்திப்பூரில் உள்ள மூலேஹோலில் இருந்து வயநாட்டில் உள்ள முத்தங்காவுக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக சென்ற அந்த நபர்கள் வனப்பகுதியில் இறங்கியுள்ளனர்.
இவர்களைப் பார்த்த ஒரு யானை அந்த இரண்டு பேரையும் துரத்துவதை முன்னால் காரில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாத நிலையில் சமூக வலைதளத்தில் இது வைரலாகி உள்ளது.
சாலையில் யானை இரண்டு பேரை துரத்தி செல்லும் நிலையில் அவர்கள் இருவருக்கும் உதவும் வகையில் அவர்கள் அருகில் சிகப்பு நிற கார் ஒன்று செல்வதும் பதிவாகி உள்ளது.
யானை துரத்திய நிலையில் இருவரில் ஒருவர் கால் இடறி கீழே விழ அவரை பின்னங்கால்களால் அந்த யானை மிதிக்க முற்பட்டது.
அப்போது எதிர் திசையில் ஒரு டெம்போ வாகனம் சென்றதை கவனித்த யானை அந்த வாகனத்தை நோக்கி கவனத்தை திருப்பியதை அடுத்து அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பந்திப்பூர் வன அலுவலரிடம் மேற்கொண்ட விசாரணையில் இது எந்த இடத்தில் நடைபெற்றது என்பது தெரியவில்லை என்ற போதும் அந்த வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
காடுகளின் வழியாக செல்லும் போது மக்கள் தங்கள் வாகனங்களை கீழே இறங்கக்கூடாது என்ற உத்தரவு இருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.