திருச்சி : விரைவில் கும்பாபிசேகம் நடைபெற உள்ள வயலூர் முருகன் கோவில் நுழைவாயிலில் அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு வந்த தோரண வாயில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அறநிலையத்துறையினரின் மெத்தனம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம் நடக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், நுழைவாயிலில் கட்டப்பட்ட வந்த ஆர்ச் திடீரென சரிந்து விழுந்தது. பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தின் பிரபலமான கோவில்களில் ஒன்று வயலூர் முருகன் கோவில். முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்களில் வயலூரும் ஒன்று என அருணகிரிநாதர் கூறியுள்ளார். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். இவ்வூரை ‘உறையூர் கூற்றத்து வயலூர்’, ‘தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்’ ‘ராஜகம்பீர வளநாடு’ ‘மேலைவயலூர்’ என்று குறிப்பிடுகின்றன. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. மூலஸ்தானம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் சன்னதிக்காக அறியப்படுகிறது. இக்கோயில் இந்து சமயப் புலவரான கிருபானந்த வாரியருடன் தொடர்புடையது.
இங்குள்ள முருகன் பெருமான் கோவிலுக்கு பிப்ரவரி 19ந்தேதி கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவசரம் அவசரமாக அறநிலையத்துறை சார்பில், கோவிலின் நுழைவு வாயிலில் 25 அடி உயரமும் 70 அடி அகலமும் கொண்ட ஆர்ச் வளைவை சிமெண்ட் மற்றும் கற்களால் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நேற்று (பிப்ரவரி 6) மதியம் ஆர்ச் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தினால், அங்கு பணியாற்றிய 4 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகம் நடக்க இருந்த நிலையில் இந்த நுழைவுவாயில் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதோ அழிவின் அறிகுறி என பலர் தெரிவித்துள்ளனர்.

அறநிலையத்துறை அதிகாரிகள் அவசரம் அவசரமாக தோரண வாயிலை கட்டி, கல்வெட்டை வைக்கும் ஆர்வத்தில், அவசர கோலத்தில் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் பணிக்கப்பட்டதால், முறையான அஸ்திவாரமின்றியும், கட்டுமான பொருட்களின் தரமின்றி, ஏனோதானோவென்று பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், தோரண வாயில் சரிந்து விழுந்ததாகவும், தோரண வாயில் தூண்களும், பலமற்ற நிலையில் இருந்ததால், விழுந்த வேகத்தில் நொறுங்கிபோனது என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.