சென்னை: வடசென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக வாயு கசிவுக்கு காரணமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமோனியா வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், சென்னை எண்ணூரில் உள்ள கொரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு 12 மணி அளவில் அம்மோனிய கசிவு ஏற்பட்டதாகவும், அதனால், அருகில் மீனவர்கள் வசிக்கும் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேலும், பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாயு கசிவிற்கு பயந்து நடந்தே சென்று உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு சிலர் திருமண மண்டபங்கள் சாலைகளில் ஓரம் குடும்பத்துடன் தஞ்சமடைந்தனர். இதில், சுமார் 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியமும் ஆய்வு செய்து, வாயு கசிவு உண்மை என அறிவித்தது. மேலும் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. சுமார் மூன்று மணி நேரம் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதாககவும் இது படிபடியாக குறைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாயு கசிவு குறித்து அந்த பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேற்றிரவு 11.30 மணியளவில் அமோனியா இறக்கும் சப்ளை பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அமோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொணடு வந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.