சென்னை: டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் அதகளப்பட்டு வருகிறது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் களம் அமைத்து பணியாற்றி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் ஒருபுறமும், மக்களை கவரும் வகையில் அறிவிப்புகளை மற்றொரு புறம் வெளியிட்டு தமிழக மக்களை திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பாஜக அதிமுக, தமாகா, பாமக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமமுக, சசிகலா, ஓபிஎஸ் அணியினரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்த நிலையில், பாஜக தனது கூட்டணியில் அமமுகவை இணைக்க முடிவு செய்துள்ளது. ஓபிஎஸ் அணியில் யாரும் இல்லாத நிலையில், அவரது நடவடிக்கையால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு மங்கி போனதால், அவரை எந்தவொரு கட்சியும் சீண்டுவதற்கு தயாராக இல்லை.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சேருவது உறுதியாகி உள்ளது. வரும் 23ந்தேதி பிரதமர் மோடி தலைமையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணியை உறுதி செய்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் உடன் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுககப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க. பா.ஜ.க. , பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் இன்று காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பியூஸ்கோயலை டி.டி.வி. தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள். கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.
[youtube-feed feed=1]