சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், ஏழை-எளிய மக்களை தேடிச்சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் ‘மினி கிளினிக்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழகஅரசு சார்பில் தமிழகம் முழுவதும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சுகாதாரத்துறை சார்பில், 2000 மினி கிளினிக் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, கிராமப்புறங்களில் 1,400-ம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200-ம், நகர்ப்புறங்களில் 200-ம், நகரும் கிளினிக்குகளாக 200-ம் என மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டன.
இந்த திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 630 அம்மா மினி கிளினிக்குகள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. அதில் சென்னையில் 3 கிளினிக்குகளும் திறக்கப்பட்டு உள்ளன.
தற்போது, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் இன்று காலை சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், இலத்துவாடியில் அம்மா கிளினிக் திறப்பால் கவர்ப்பனை, திட்டச்சேரி, கிழக்குராஜபாளையம் மக்கள் பயனடைவர் என்றும், ஊரக பகுதி விவசாயிகள் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க தொடங்கப்பட்டதே ‘அம்மா கிளினிக்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.