சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்குள் இன்று காலை புகுந்த திமுகவினர் அங்கிருந்த , பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட அனைத்தையும் சூறையாடினர். உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இது முதல்வராக  பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு குறைந்த அளவிலும், கொரோனா காலக்கட்டத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக உணவளித்த அம்மா உணவகம் சூறையாடப்பட்ட ம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுகவினரின் அராஜகத்துக்கு சமூக வலைதளங்களில்  நெட்டிசன்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வரும் நிலையில், அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது.

இந்த நிலையில், டிவிட் பதிவிட்ட முன்னாள் மேயரும், சைதை எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன்,  மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார் என தெரிவித்து அது தொடர்பான வீடியோவும் வெளியிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திமுகவினர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது மு.க ஸ்டாலினின் கவனத்திற்கு எட்டியது. ஆத்திரமடைந்த அவர், பெயர் பலகையை உடைத்தெறிந்து அம்மா உணவகத்தை சூறையாடிய நபர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மா.சு,  கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று கூறினார். அவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளித்து இருப்பதாகவும் அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திமுக அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அம்மா உணவகம் பெயர் பலகை உடனே சரி செய்யப்பட்டது! ஸ்டாலின் அதிரடி – வீடியோ…