சென்னை

நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசு விதி எண் 370ஐ நீக்கியதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வெகு நாட்களாக அரசியல் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்களில் பலர் நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில் வெகு நாட்களாக அவர் அது குறித்துக் கூறவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு தாம் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். ஆனால் 2019 மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தனக்கு 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு எனவும் அப்போது அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370ஐ மத்திய அரசு நீக்கம் செய்தது. அத்துடன் ஜம்மு வையும் காஷ்மீரையும் தனித்தனி யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியைச் சட்டப்பேரவை இல்லாமல் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் அரசு அறிவித்தது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்று ரஜினிகாந்த், “காஷ்மீர் மீது எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக நான் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இது குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அருமையாக இருந்தது அமித்ஷா மற்றும் மோடி ஆகிய இருவரும கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனைப் போல் உள்ளனர். அவர்களில் யார் எவர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். நான் உங்களுக்கும் உங்கள் மூலம் நமது நாட்டுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறி உள்ளார்.

மேலும் ரஜினிகாந்த், “நமது நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் மிகவும் பாராட்டுக்குரியவர் ஆவார். வெங்கையா நாயுடு எப்போதும் மக்கள் நலன் குறித்து மட்டுமே சிந்திப்பவர். அவர் தவறுதலாக அரசியல் தலைவர் ஆகி உள்ளார். உண்மையில் அவர் ஒரு அருமையான ஆன்மீக தலைவர் என்பதே சரி ஆகும்” எனக் கூறி உள்ளார்.