டில்லி

லகெங்கும் கொரோனா பரவி வரும் காலத்திலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உலகெங்கும் கொரோனா தொற்று பரவியதால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மக்களில் பலர் பணி இழப்பு, வருவாய் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருமை நிலைக்குத் தள்ளப்பட்டுத் துயருற்று வருகின்றனர்.  ஆனால் செல்வந்தர்கள் நிலை நேர் மாறாக உள்ளது.

பல செல்வந்தர்கள் இந்த கொரோனா நெருக்கடிக் காலத்திலும் தங்களது செல்வத்தைப் பெருக்கி மேலும் செல்வந்தர்கள் ஆகி வருகின்றனர். இந்தியாவில் சென்ற 2018 ஆம் நிதி ஆண்டில் ரூ.100 கோடி மற்றும் அதற்கும் மேல் வருவாய் ஈட்டியோர் எண்ணிக்கை 77 ஆக இருந்தது.  ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கடந்த 2020 ஆம் ஆண்டு 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 141 அதிகரித்துள்ளதாகவும் 2021 நிதி ஆண்டில் அது மேலும் 136 அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தகவலின்படி இது தெரிய வந்துள்ளதாக அவர் கூறி உள்ளார்.