இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவும் சிக்கலைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வை இன்று இரவு சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் பளிங்கென் அமெரிக்க அதிபரின் வருகை குறித்து அறிவித்தார்.
பதற்றமான சூழலில் ஜோ பைடன் வருவதை அடுத்து அவரது பாதுகாப்பு குறித்து அனைத்து ஏற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வரும் பைடன் டெல் அவிவ் நகரில் பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளார்.
ஏற்கனவே ஈரானை எச்சரித்துள்ள பைடன் இஸ்ரேல் பயணத்தை தொடர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்று ஜோர்டான் மன்னர், எகிப்து அதிபர் மற்றும் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்க அதிபரின் இந்த பயணம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தை தணிக்க வழியேற்படுத்தும் என்றும் காசா-வில் உள்ள அப்பாவி மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்க வகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.