டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கடந்த ஓராண்டில் மட்டும் ரயில்களில் 27 லட்சம் பேர் ‘வித்அவுட்’ (டிக்கெட் எடுக்காமல்) பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.143 கோடி அபராதமாக ரயில்வே வசூலித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதலே ரயில் சேவைகளும் குறைக்கப்பட்டும், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பின்னர் தளர்வுகளுக்கு தகுந்தவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் எழுப்பிய கேள்விக்கு, ‘கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்ததாக  27.57 லட்சம் பேர் பிடிபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, ரூ.143 கோடி அபராதம் வசூலிகாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான நிதியாண்டில் நாடு முழுதும் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 27.57 லட்சம் பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு அபராதமாக ரூ.143.82 கோடி விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான நிதியாண்டில் இதேபோல் பயணச்சீட்டு இல்லாமல் 1.10 கோடி பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.561.73 கோடி அபாரதமாக வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.