ted nash
நேருவின் உரையை இசையாக்கி “ கிராமி” பட்டம் வென்ற இசையமைப்பாளர்.

விதியுடனான ஒப்பந்தம் (Tryst with Destiny) அல்லது விதியுடனான சந்திப்பு என்பது விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 1947 ஆகஸ்டு 14 நள்ளிரவில் இந்திய மக்களிடம் முதன் முதலாக ஆற்றிய உரை. உலகின் சிறந்த பேச்சுகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.

“பல வருடங்களுக்கு முன்னர் நாம் விதியைக் குறித்த நேரத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த நேரம் வந்து விட்டது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது. இப்புனிதமான நேரத்தில், இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.”
என்பதாகத் துவங்கியது அந்த உரை.

நேருவின் உரை “ நல்லொழுக்கம்”, “ உண்மை” மற்றும் “எழுச்சி”யூட்டும் உரையாகப் போற்றப்பட்டது. ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாள் “ 20 ம் நூற்றாண்டின் மாபெரும் உரைகளில் ஒன்று” எனப் புகழாரம் சூட்டியது. ( இதனையறியாத இன்றைய ஊடகவியலாளர்கள், பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டு “நேருயிசம்” இந்தியாவை குட்டிச் சுவராக்கி விட்டதென வெற்றுக் கூச்சலிடுகின்றனர் ).
அமெரிக்க ஜாஸ் சாக்ஸாஃபோன் மற்றும் இசையமைப்பாளர் டெட் நாஷ் ஒருமுறை இந்த உரையைத் தற்செயலாய் கேட்க நேர்ந்தது. இந்த உரையைக் கேட்டு அசந்துப் போன இவர், இந்த உரையினை இசைவடிவமாக்க ஆர்வம் கொண்டார். அதனை இசைவடிவமாக்கி ஆல்பமாக வெளியிட்டார்.

அந்த ஆல்பத்தில், ஜான் எப். கென்னடி, பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், லிண்டன் பி ஜான்சன், ரொனால்ட் ரீகன், வின்ஸ்டன் சர்ச்சில், ஜவகர்லால் நேரு, ஆங் சான் சூ-கி, மற்றும் நெல்சன் மண்டேலா ஆகிய எட்டு தலைவர்களின் உரையை இசையுடன் கோர்த்து வெளியிட்டார்.

இந்த இசைவெளியிட்டுக்கு இசைத்துறையில் உயரிய விருதான “கிராமி” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஒரு” கிராமி விருது” அல்லது “ கிராமி” என்பது ஆங்கில இசை உலகில் தலைசிறந்த சாதனைகள் அடையாளம் கண்டு மரியாதை செலுத்தும் விதமாக “ ரிக்கார்டிங் அகாடமி” யால் வழங்கப்படும் விருது ஆகும்.

ஜாஷ் இசைக் கலைஞர் டெட் நாஷ் கிராமி விருதுகுறித்து கூறுகையில், “நேரு சுதந்திர இந்தியாவின் துவக்க உரை, உணர்வுப்பூர்வமானதாய், இந்தியாவின் சுதந்திரத்தை உலகுக்கு தெரியப்படுத்தும்படியும் அமைந்திருந்தது. அந்த உரையை இப்பொழுதுக் கேட்டாலும் எனக்கு மெய்சிலிர்க்கும்.மயிர் கூச்செரியும்… எனவே தான் அதனை இசைவடிவமாக்க முடிவுசெய்து வெற்றிகண்டேன். தற்போது பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி ” என்றார்.

இந்த ஆல்பத்தின் செயற்குழுத் தயாரிப்பாளரான கபீர் சேகல் இந்திய-வம்சாவளி அமெரிக்கர் ஆவார். இவரது முன்னோர் பஞ்சாப் இருந்துஅமெரிக்காவில் குடியேறியவர்கள். இவர் நாஷ்-யின் எண்ணங்களையே எதிரொலித்தார். “நான் இந்திய பாரம்பரியத்தை கொண்ட அமெரிக்க குடிமகன் என்பதில் பெருமையடைகின்றேன். குடியேறியவர்கள் அமெரிக்காவில் சவால்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் டெட் –டின் இசைத்தகடு, “ சக்திவாய்ந்த கருத்துக்கள் எல்லா இடங்களிலும் இருந்து வரும்” என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டலாய் வந்துள்ளது” என்றார்.