அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவர்கள் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சையை நிகழ்த்தியுள்ளனர்.
இதுவரை ஒரு சில வகையான பார்வை இழப்புகளுக்கு மட்டும் பொதுவாக கார்னியா (Cornea) மாற்று அறுவை சிகிச்சை – – கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான திசு – செய்யப்பட்டு வந்தது.
ஒரு முழு கண்ணையும் – கண் பார்வை, அதன் இரத்த நாளங்கள் மற்றும் மூளையுடன் இணைக்க வேண்டிய முக்கியமான பார்வை நரம்பு – மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளது உலகில் இதுவே முதல் முறை.
அமெரிக்க மருத்துவர்கள் மேற்கொண்ட இந்த முழு கண் மாற்று அறுவை சிகிச்சை பார்வையின்மையைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்று கூறப்படுகிறது.
உயர் மின்சார கம்பிகளால் ஏற்பட்ட விபத்தில் தனது முகத்தையும் ஒரு கண்ணையும் இழந்த ஆரோன் ஜேம்ஸ் என்ற நபருக்கு இந்த ஆண்டு மே மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக நேற்று நியூயார்க் லாங்கோன் ஹெல்த் அறுவைசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரோன் ஜேம்ஸின் இடது கண் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், கண் சிறப்பாக பொருந்தி வருவதாகவும் அவரது இமைகளில் உணர்ச்சி கூடிவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜேம்ஸ் கூறுகையில், “எனக்கு வலது கண்ணில் மட்டுமே பார்வை உள்ளது, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடது கண்ணில் பார்வை இல்லை தவிர இமைகளில் உணர்ச்சியில்லை என்ற போதும் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையின்மையைப் போக்கும் மருத்துவர்களின் முயற்சிக்கு இந்த அறுவை சிகிச்சை உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இதன் மூலம் அடுத்தடுத்த நோயாளிகளுக்கு மேற்கொள்ளும் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வைத் திறனை வழங்க மருத்துவர்களுக்கு உதவும்” என்றும் கூறினார்.
இந்த அறுவை சிகிச்சை மூலம் ஜேம்ஸ்-க்கு பார்வைத் திறனை வழங்க முடியுமா என்பதில் மருத்துவர்களுக்கு சந்தேகம் உள்ளபோதும் இந்த முழு கண் மாற்று அறுவை சிகிச்சை பார்வையின்மையைக் குணப்படுத்த தேவையான அடுத்தகட்ட ஆய்வுக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.