சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 . இது வரை டி43 என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு தற்போது ‘மாறன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் மகேந்திரன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், ‘மாறன்’ படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அமீர் நடித்துவரும் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இயக்குநர் அமீர், தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.