சென்னை:

சென்னையில் 500க்கும் மேலான குழந்தைகள் ஆபாச வீடியோ தரவிறக்கம் செய்து வைத்திருந்த அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குழந்தைகள் சம்பந்தமான ஆபாசப் படங்களை இணையதளங்களிலோ அல்லது வேறு வகைகளிலோ பார்ப்பது சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பலர் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை தரவிறக்கம் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.

குழந்தைகள் ஆபாசப் படங்கள் தமிழக்ததில்தான் அதிக அளவில் பார்க்கப்படுவதாகவும் பகிரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் காவல்துறையினர்,  வலைதளங்களில் குழந்தைகளைக் காட்சிப்படுத்தி ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள்  உபயோகப்படுத்தும் கணினி, மொபைல் ஐபி அட்ரசை வைத்து,  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே முதன் முதலாக திருச்சியை சேர்ந்த அல்போன்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்த சுமித் குமார் கல்ரா என்ற 49வயது தொழிலதிபர், குழந்தைகள் ஆபாச பட இணைப்பை மற்றவர்களுக்கு அனுப்பியதாக கூறி கைது செய்யப்பட்டார். இதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த  ஹரீஷ் என்ற பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரிடம் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட ஆபாசப்பட வீடியோக்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசரணையில், 11ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ஆபாசப் படங்கள் பார்த்து வருவதாகவும், கடந்த 8 வருடங்களாக படங்களை சேகரித்து வருவதாகவும் கூறி உள்ளார். தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.