அம்பாசமுத்திரம் ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம்.
கங்கை நதிக்கரையில் காசியும், காசியில் ஸ்ரீ விஸ்வநாதரும் அருள் பாலிக்கின்றனர். கங்கை ஆறு தண்பொருநை ஆற்றில், அதாவது தாமிரபரணி ஆற்றில் கலந்து வருவதாக திருநெல்வேலி புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த கங்கையையும் காசியையும் இணைத்து இத்திருத்தல மூர்த்திக்கு ஸ்ரீ காசிநாதர் என்ற திருநாமம் வந்ததாகக் கூறப்படுகிறது.
அம்பாசமுத்திரத்தில் காசிப முனிவர் சிவபெருமானை வேண்டி ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் தோன்றிய சிவபெருமானிடம், காசிப முனிவர், தான் தினமும் பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்று வேண்டும் என்று கேட்ட போது, காசிப முனிவர் முன் தோன்றிய சிவபெருமானே சிவலிங்கமாக உருமாறினார். காசிப முனிவர் வழிபட சிவபெருமானே சிவலிங்கமாக உருமாறிய அந்த சிவலிங்கத்தையே பிரதிஷ்டை செய்து ஸ்ரீ காசிபநாதராக வணங்கி வழிபட்டு வந்தார் காசிப முனிவர். தற்போது ஸ்ரீ காசிபநாதர் என்ற பெயர் மருவி ஸ்ரீ காசிநாதர் என்று அழைக்ககப்படுகிறார் .
ஸ்ரீ மரகதாம்பாள் தனது பக்தர்களுக்கு பிள்ளைச் செல்வத்தை வழங்குவதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்பாளுக்கு தொட்டில் கட்டி வளையல் அணிவித்து குதூகலம் அடைகின்றனர். பக்தர்களுக்கு, அம்பாள், சமுத்திரம் போல் அருளை வாரி வாரி வழங்குவதால் அம்பாள் சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்திருத்தலத்தின் பெயர் நாளடைவில் அம்பாசமுத்திரம் என மருவியதாகக் கூறப்படுகிறது.
இந்த சிவ திருத்தலத்தில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது கிடையாது. ஆனால் ஐப்பசி மாதப் பிறப்பன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைப் பேறு பெறவும், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவோரும் வழிபட வேண்டிய திருத்தலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பாள் உடனாய ஸ்ரீ காசிநாதர் அருளும் திருத்தலம்.
திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அம்பாசமுத்திரம் அமைந்துள்ளது.