லக்னோ:

5-வது கட்டமாக 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வருகிறது. அதுபோல சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் சரியாக வாக்குகள் பதிவாகி வருகிறது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள  பூத் எண் 333 அமைக்கப்பட்டுள்ள ஸ்காலர் ஹோம் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

முன்னாள் பாஜக தலைவர் சத்ருகன் சின்ஹா வாக்காளர்களுடன் வரிசையில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்.

அதுபோல பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி காலையிலேயே வந்து தனது வாக்கினை செலுத்தினார். அவர் லக்னோவில் உள்ள சிட்டி மான்டிசோரி காலேஜில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலையொட்டி 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் இன்று காலை முதலே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார்.

51 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

17வது நாடாளுமன்றத்தை கட்டமைப்பதற்கான, லோக்சபா தேர்தல் 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் 4 கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11, 18, 23, 29-ந் தேதிகளில்  முடிவடைந்து  விட்டது. இன்று  5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் , காஷ்மீரில் 2 தொகுதிகள்  என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில் சுமார்  8¾ கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றவர்கள் களத்தில்  675 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 12 சதவீத பேர் பெண் வேட்பாளர்கள்.

5-வது கட்டத்துடன் ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைய உள்ளது. மொத்தம்  425 தொகுதிகளில் தேர்தல் முடிய உள்ளது.  இதைத்தொடர்ந்து 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்டமாகவும், 19-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது.