நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்கள் நினைவாக டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி எனும் நினைவிடம் 1971 டிசம்பரில் நிறுவப்பட்டது.

பாகிஸ்தானுடனான போரில் இந்திய வெற்றிக்காக உயிர்நீத்த ராணுவவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார், இந்த நினைவிடத்தில் அணையா விளக்கும் வைக்கப்பட்டது.

அதே பகுதியில், 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தேசிய போர் நினைவு மண்டபம் ஒன்றை திறந்தார்.

அமர் ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கை இந்த போர் நினைவு சின்னத்திற்கு இன்று முதல் மாற்றப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுதந்திரத்தின் அமுதை ஆட்சியில் உள்ள பா.ஜ.க. திகட்ட திகட்ட பருகி வருவதுடன் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக இருந்துவரும் நினைவுச் சின்னங்களை மாற்றியும் புதிய வரலாற்றை எழுதி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “50 ஆண்டு பாரம்பரியமிக்க அமர் ஜவான் ஜோதி இன்று அணைக்கப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தேசப்பற்று மற்றும் தியாகம் போன்ற வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியாதவர்களின் நடவடிக்கையாகவே இதனை பார்க்க முடிகிறது.

அமர் ஜவான் ஜோதி மீண்டும் அதே இடத்தில் ஏற்றப்படும்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமர் ஜவான் ஜோதி பகுதியில் உள்ள நினைவிடத்தில், உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை அதனால் தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணமடைந்தவர்களின் பெயர் பலகையோடு வைக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.