சென்னை
சென்னை நகரில் அமைந்தகரை பகுதியில் உள்ள கூவம் நதி ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
சென்னையில் ஓடும் கூவம் நதிக்கரை ஓரம் ஏராளமான ஆக்கிரமிப்புக்கள் உள்ளன. கூவம் நதி சுத்திகரிப்பு திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்புக்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அகற்றப்படும் மக்களுக்கு பேரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு குடியிருப்புக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னை அமைந்தகரை கக்கன் நகர் பகுதியில் உள்ள 252 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளவர்களில் 69 பேருக்கு பேரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கக்கன் நகரில் இருந்து அகற்றப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே கட்டிடத்தில் குடியிருப்புக்கள் வழங்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததால் குடியிருப்பு அளிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், “செவ்வாய்க்கிழமை அன்று அதிகாரிகள் எங்களிடம் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என வாய்மொழியாகத் தெரிவித்தனர். ஆனால் நேற்று திடீரென இங்கு வந்து எங்கள் குடியிருப்புக்களை அகற்றி விட்டனர். எங்களுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் எங்களை அதிரடியாக காலி செய்ய வைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞர், “எங்கள் குழந்தைகள் அமைந்தகரை பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வருட மத்தியில் இவ்வாறு எங்களை இடம் பெயரச் செய்வதால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது மிகவும் கடினமாகி உள்ளது. பேரம்பாக்கத்தில் பள்ளி வசதிகள் குறைவாக உள்ளதால் எங்களால் இங்குக் குழந்தைகளைப் பள்ளி மாற்றம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே எழுத்து பூர்வமாக காலி செய்யும் உத்தரவு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இன்று சிந்தாதிரிப்பேட்டை பல்லவன் நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.