சேலம்:

நான் என்ன ஜோக்கரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை நீரின் மேல் மிதக்கவிடும் திட்டத்தை செயல்படுத்தினார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அந்த அட்டைகள், அடுத்த சில நொடிகளில் பறந்து, நகர்ந்துவிட்டன. இதனால், செல்லூர் ராஜூவை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

தொடர்ந்து செல்லூர் ராஜு, “மழை வந்தால் தண்ணீர் தேங்கும்.. மழை நின்றுவிட்டால் தண்ணீர் தேங்காது” என்பது போல பேசியதும் சமூகவலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. இவரை மையமாக வைத்து மீம்ஸ்கள் பரவின.

இந்த நிலையில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட செல்லூர் ராஜூ, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது,  தி.மு.க நடத்திய தூர்வாரும் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர், “தி.மு.க.வினர் மேற்கொண்ட தூர்வாரும் பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததாக மு.க. ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, “நீங்கள் என்னை மட்டும் ஜோக்கராக்க பார்க்கறீர்கள்.. நான் என்ன ஜோக்கரா?” என்று கூறிவிட்டு கோபத்துடன் சென்றுவிட்டார்.