நீலகிரி: முதுமலை யானை முகாமில், தாய் யானைகளால் தவிக்க விடப்படும் யானை குட்டிகள் மற்றும் வயதான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பும், 3 ஆண்டுகளுக்கு முன்பும், முதுமலை முகாமுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் தற்போது துள்ளி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரான சுப்ரியா சாஹூ பதிவிட்டுள்ளார்.
100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் குட்டி யானை உள்பட 49 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், அவற்றை பிடித்து கூட்டில் அடைத்து பழக்கப்படுத்துவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதுமலை முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன உயிரின ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் யானைகள் குறித்து பல்வேறு தகவல்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இந்த நேரத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரான சுப்ரியா சாஹூ முதுமலை காப்பகத்தில் துள்ளி விளையாடும் யானை குட்டிகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதில், ரகு என்ற குட்டியானை, சுமார் 6 மாத குழந்தையாக இருந்தபோது தாயைப் பிரிந்து அனாதையான நிலையில், முதுமலை முகாமுக்கு வந்தது. இன்று அதற்கு வயதாகிறது. அந்த யானையும், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனாதையாக முகாமுக்கு வந்த பொம்மி என்ற யானையும் துள்ளி விளையாடும் காட்சி தொடர்பான வீடியோவை பதிவிட்டு, அத்துடன், எப்பொழுதும் மிகவும் குறும்பு மற்றும் விளையாட்டுத்தனமாக பொம்மியுடன் ரகு விளையாடி வருவதாக பதிவிட்டுள்ளார்.