சென்னை: சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையின் ஒரே இடத்தில் அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும் வகையில், புட் ஸ்டிரிட் (உணவு தெரு) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது அதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச் சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.20 கோடி செலவில் இந்த உணவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப, சென்னை மாநகராட்சித்தையும் சிங்காரச் சென்னையாக மாற்றவும், அதன்மூலம் வருமானத்தை அள்ளவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக,  சென்னையில் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் புட் ஸ்ட்ரீட் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியளார்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், “சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஒரு திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்படும். மேலும், அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். இதன்பிறகு சென்னையில் பிரபலமாக உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து உணவகங்களையும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் காலங்களில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாக்கள் நடத்த ஏற்ற இடமாக இது இருக்கும். இதற்கான தொடக்க கட்ட பணிகள் நடைபெற்றது. விரைவில் இந்த பணிகள் இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.