சென்னை: மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் பேசிய பிறகு தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாக்குறுதிகள் அளித்துள்ளதுள்ளனர்.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள்  கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் 10 பேரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

இதனையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் போராட்டக்குழுவின் பத்து பிரதிநிதிகளுடன் சுமார் அரைமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டக்குழு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன:

1.     முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வேண்டும்.

2. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.

3. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

4. நாடாளுமன்றத்திலும் குடியரசுத் தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச் சட்டம் கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

5. பீட்டா அமைப்பை குறைந்த பட்சம் தமிழகத்தில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் தமிழக அரசு சார்பில் அளித்துள்ள வாக்குறுதிகளாவன :

1. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுவார்.

2. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க அழுத்தம் கொடுக்கப்படும்.

3. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

4. நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச்சட்டம் கொண்டு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

5. பீட்டா அமைப்பை தடை செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.