டெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக சரமாயான கேள்விகளை எழுப்பியதுடன், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உறுதிசெய்யப்படுமானால், அது தீவிரமானதே என்று கூறியதுடன், மனுவுக்கு பதில் அளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ராகுல்காந்தி உள்பட மத்தியஅமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என 300பேரின்  செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்தியஅரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இதற்கிடையில், பெகாசசஸ் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக,.வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, பத்திரிகையாளர் என்.ராம், கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், கல்வியாளர் ஜகதீப் சோட்கர், நரேந்திர மிஸ்ரா, ருபேஷ் குமார் சிங், பரோஞ்சய் ராய் தாக்கூர்தா, எஸ்.என்.எம்.அப்தி மற்றும் இந்திய எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு ஆகிய பேரின் மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், காங்கிரஸ் மூத்த தலைவரும்  வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். விசாரணையின்போது காரசாரமாக வாதங்கள் நடைபெற்றது.

விசாரணையின்போது, கல்வியாளர் ஜெகதீப் சோட்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், தற்போதைய வழக்கின் அளவு மிகப் பெரியது, மேலும் இந்த வழக்கில் சுயாதீன விசாரணையை கருத்தில் கொள்ள வேண்டம்.. இந்த முன்னுரிமை அமைச்சரவை செயலாளருக்கு பதிலளிக்கும் உயர் மட்ட அதிகாரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பத்திரிகையாளர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தர், ஒட்டுமொத்த குடிமக்களின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தனியுரிமை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும், மக்கள் மீது அரசு கண்காணிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான அடிப்படையோ அல்லது அதனுடன் தொடர்புடைய உண்மையோ இல்லை என்றும் , இந்த அறிக்கைகளில் “உண்மை இல்லை” என்றும் தெரிவித்தது.

அதையடுத்து, மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,

மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதுபோல, 2019லிருந்து ஒட்டு கேட்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்காதது ஏன்?

இதுவரை ஒருவர்கூட காவல்துறையில் கிரிமினல் புகார் கொடுக்காதது ஏன்?

தற்போது குறுகிய காலத்திற்குள் இந்த விவகாரத்தை விரைவுப்படுத்துவது ஏன்?

‘ஊடகங்களில் வந்த இந்த செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிரமானது. ஆனால் தொடரப்பட்டிருக்கும் வழக்கில் அத்தனையும் ஊடகங்கள் சொல்வதாகத்தான் உள்ளதே தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களும் தங்களது ஃபோன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்கிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். 

‘ஊடகங்களில் வந்த இந்த செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிரமானது. ஆனால்,  செய்தியின் உண்மை தன்மை அறிந்த பிறகு மேற்கொண்டு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து மனுதாரர்களும் தங்கள் மனு நகலை மத்திய அரசுக்கு வழங்குமாறு  உத்தரவிட்டு, மனுதாரர்கள் புகார் தொடர்பாக  பதில் அளிக்க உத்தரவிட்டு  வழக்கை அடுத்த செவ்வாய்க்கிழமை தள்ளி வைத்தது.