அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்….. விடிய விடிய கடும் குளிரிலும் இன்றும் தொடர்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த பத்து நாட்களாக்கும் மேலாக மக்கள், தன்னெழுச்சியாக ஜல்க்கட்டுதடையை நீக்க போராடி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தாங்களாகவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியும் வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை 7 மணி முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட இளைஞர்கள், அலங்காநல்லூர் வாடிவாசல் (ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்துவிடும் இடம்) முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‛வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறாமல் இங்கிருந்து கலைந்து போக மாட்டோம்’ என்று மக்கள் உறுதியாக உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு  உணவு மற்றும் குடிநீர்  செல்லாமல் காவல்துறையினர் தடுக்கிறார்கள். தண்ணீர் பாக்கெட் விநியோகம் செய்வதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை. அதையும் மீறி உள்ளூர் மக்கள் போராட்டக்காரர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

சென்னையில் ஐ.டி நிறுவனங்களில் பணி புரியும் நுற்றுக்கணக்கான  பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  வசதி வாய்ப்பாக வாழும் இவர்கள், தற்போது கிராம மக்கள் தந்த உரச்சாக்குகளை போர்த்திக் கொண்டும் தீ மூட்டி குளிரை ஓரளவு போக்கிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வாடிவாசல் முன் இரவு முழுதும் அமர்ந்திருந்தனர்.  பலர் உணவு, நீர் இன்றி மயக்கம் அடைந்தனர். அலங்காநல்லுார் வாடிவாசல் பகுதியில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதால் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போதும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அலங்காநல்லூர் நோக்கி இளைஞர்கள் குழுமி வருகிறார்கள். அவர்களை ஊருக்கு வெளியிலேயே காவல்துறையினர் தடுத்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

.