சென்னை: சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்கான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் சனாதனத்தின் விழுமியங்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சனாதனம் அழியாதது”. சனாதனம் தான் எல்லாமே, சனாதனத்தை அழிக்க பார்ப்பது நாட்டையே பிளவுபடுத்துவதற்குச் சமம், அதை யாராலும் அழிக்க முடியாது, முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க முயல்பவர்கள் பாரதத்தை உடைக்க நினைக்கிறார்கள். அவர்களின் தீய செயல்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ள சனாதனத்த ஒழிக்க வேண்டும் என்றும், ”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்” என கூறியிருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ன.
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, சனாதனன்ம குறித்த தகவல்கள் பகிர்ந்தார். அவர் பேசியதாவது,
பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாமே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பது பாரத். பாரத் என்பது சனாதன தர்மத்தின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது.
சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள், சனாதனத்திற்கு கேடு விளைவிக்க நினைப்பவர்கள், நாட்டையே பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் அப்படி பேசுகிறார்கள். ஆனால், நாட்டின் அடிப்படை சக்தி என்பதே சனாதனம் தான். எனவே நீங்கள் இந்த நாட்டை உடைக்க விரும்பினால், சனாதனத்தை தாக்குங்கள். அதைத்தான் ஆங்கிலேயர்கள் செய்தார்கள். முயற்சித்தார்கள். அப்படித்தான் அவர்கள் பாரதத்தை உடைப்பதில் வெற்றி பெற்றார்கள்.
இன்னொரு பிரிவினையை பாரதத்தால் தாங்க முடியாது. சனாதன ஒளியைப் பரப்பும் நமது பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். சனாதனம் உலகிற்கு தேவையான ஒன்று. சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை.
சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது, வேர் இல்லாமல் மரம் வளர முடியாது. தமிழகத்தில் சனாதனம் வளமோடு இருந்தது. சனாதனம் செழித்த புண்ணிய ஸ்தலமாக தமிழ்நாடு இருந்ததற்கான சான்று உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறுபவர்கள், முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் அழித்துப் பாருங்கள். சனாதனம் மக்களின் டிஎன்ஏவிலும், அவர்களது வாழ்வியலிலும் உள்ளது.
சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். ஆனால் யாராலும் அதை அழிக்க முடியவில்லை. தற்போது சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தங்களது அரசியல் லாபத்திற்கான கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவர்கள் சனாதனத்தின் விழுமியங்களைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சனாதனம் அழியாதது” .
இவ்வாறு கூறினார்.
உதயநிதியின் பெயரையே குறிப்பிடாமல் அவரது சனாதனம் தொடர்பான கருத்துக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் ரவி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.