புதுச்சேரி: மாநிலத்தில் ஜனவரி 4ம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி  கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 21ந்தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் போதித்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை கடைபிடித்து,  கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்தியஅரசு அறிவித்தது. அதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணாக்கர்களுக்கு டிசம்பர் முதல் பள்ளிக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

அதன்படி,  ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். அதாவது, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.  பின்னர் ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுருக்கிறது.  விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.” என்று தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.