நியூஸ்பாண்ட்:
“பாவம்.. சோதனை மேல் சோதனை..” என்று சொல்லியபடியே வந்தார் நியூஸ்பாண்ட்.
அவரே பேசுவார் என்று எதிர்பார்த்து, பதில் ஏதும் சொல்லாமல், சுக்குகாபியை நீட்டினோம்.
வாங்கிக்கொண்டு சோபாவில் அமர்ந்தவர், “கணவர் இறந்ததால் பரோலில் வந்த சசிகலாவுக்கு உறவுகள் மேலும் சோகத்தைத் தந்திருக்கிறார்கள்” என்றார் நியூஸ்பாண்ட்.
“ஏன்.. நடராஜன் நினைவேந்தல் நெகிழ்வோடு நடத்தி முடித்திருக்கிறார்கள். நல்லகண்ணு உட்பட பல அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.. பிறகு என்ன உறவினரால் சோகம்…” என்றோம்.
“சொல்கிறேன்.. கணவர் ம.நடராஜன் மறைவையடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதி பரோலில் தஞ்சாவூர் வந்த சசிகலா, பரோல் காலம் முடிய ஐந்து நாள்கள் மீதம் இருக்கும் நிலையில் இன்று (மார்ச் 31) காலை பரபரப்பன அக்ரஹாரா சிறைக்குத் திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியானது அல்லவா..
தஞ்சாவூர் வந்த சசிகலா, கணவரின் அருளானந்த நகர் வீட்டில்தான் தங்கியிருந்தார். நேற்று காலை நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னதாக மாலையில் தினகரன், திவாகரன், நடராஜனின் அண்ணன்கள் உள்ளிட்ட உறவினர்களுடன் குடும்பப் பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசித்தார். மறைந்த நடராஜனுக்கு இந்தியா முழுவதும் கல்லூரிகள், எஸ்டேட்டுகள் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் உளஅளன.
நடராஜனுக்கு இறுதிச் சடங்கு செய்தவர் நடராஜனின் அண்ணன் எம்.ஆரின் மகனான எம்.ஆர்.ரங்கராஜன்தான். ஆகவே, சொத்துகள் அவருக்கே வர வேண்டும் என்று நடராஜனின் சகோதரர்கள் குடும்பத்தினர் கூறினர். மலும், ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலமாக இந்தச் சொத்துகளை நிர்வாகம் செய்துகொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதே நேரம், சொத்துகளில் குறிப்பிட்ட பகுதியை தினகரன் கேட்டார். தான் கட்சி நடத்துவதற்காக அவை பயன்படும் என்றார்.
இதனால் உறவுகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்..”
“ஓ…”
“ஆமாம்… ஆனால் சட்டப்படி அந்தச் சொத்துகள் முழுதும் மனைவியாகிய சசிகலாவுக்கே உரிமை. அவர் கையெழுத்து போட்டால்தான் சொத்துகளை எவருக்கும் மாற்ற முடியும்.
தற்போது இந்த விவகாரம்தான் குடும்பத்தில் குதர்க்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது!”
“சொத்துக்கள் என்றாலே பிரச்சினைகள்தானே..!”
“ம்… இன்னொரு பிரச்சினை, கட்சி விவகாரம். அதாவது, திவாகரன், தன் மகனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கியப் பதவி அளிக்கும்படி சசிகலாவை வற்புறுத்தினாராம். இதற்கு தினகரன் மவுனம் சாதித்தாராம்!”
“பாவம்தான் சசிகலா..”
“சொத்து மற்றும் கட்சி பொறுப்பு விவகாரங்களால் குடும்பம் ரெண்டு பட்டு விவாதங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் டென்சன் ஆன சசிகலா, சொத்துக்களுக்காகத்தானே அடித்துக்கொள்கிறீர்கள்? எல்லாவற்றையும் அநாதை ஆசிரமங்களுக்கு எழுதிவைத்துவிடுவன் என்று ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார்.
அவரது கோபத்தைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அமைதிகாத்திருக்கிறார்கள்.
பிறகு சசிகலா, தற்போதைக்கு சொத்து விவகாரம், கட்சி விவகாரம் எதுவும் வேண்டாம். பரோல் நாளுக்கு முன்பே நான் சிறைக்குத் திரும்புவகிறேன். சில நாட்கள் அமைதியாக யோசித்துவிட்டு முடிவெடுக்கிறேன் என்றாராம்!” – சொல்லிவிட்டு பறந்துவிட்டார் நியூஸ்பாண்ட்.