சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்மீது சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற கட்சி எம்எல்ஏக்கள் உரையாற்றி வருகின்றனர்.
நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற உத்தரவை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியான நடைமுறையல்ல கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்தார்.
இதையடுத்து மற்ற கட்சி எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை சட்டப்பேரவையில் பதிவு செய்தனர்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். அரியலூர் அனிதா தொடங்கி 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். ஏழை மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது. நீட் எனும் நுழையா தேர்வு காரணமாக பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சிறப்பு கூட்டத்தில் வேல்முருகன் பேசினார். நீட் தேர்வு என்று சொன்னாலே மாணவர்களுக்கு அச்சம், பதற்றம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய கொங்குநாடு கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன், நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என கூறினார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி, 7.5% இட ஒதுக்கீட்டை 15% ஆக உயர்த்த வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிகர்நிலை அனைத்து பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, இந்தியாவில் ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த வேண்டும் என்று கூறியதுடன், அன்று தீட்டு என்று சொல்லி, அன்று ஒதுக்கி வைத்தார்கள்.. இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை , காமாலை பார்வையின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்பதை எப்படி ஏற்க முடியும் என கூறினார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன், சமூக நீதி என்ற ஆணிவேரில் நீட் தேர்வு என்ற வெந்நீரை மத்திய அரசு ஊற்றுகிறது என்று விமர்சித்தார். சமூக நீதியின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல் நீட் தேர்வு கொண்டு வந்தது ஒன்றிய அரசு என தளி ராமசந்திரன் பேசினார். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் என கூறினார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய சதன்திருமலைக்குமார், நீட் விலக்கு கோரி முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து, வலியுறுத்தியும் கூட ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு மசோதாவை அனுப்பவில்லை என்றும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மாநில அரசின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய நாகை மாலி, ஆளுநரின் செயல் மக்கள் உணர்வை காயப்படுத்தும் விதமாக உள்ளது. நீட் விலக்கு மசோதாவை 5 மாதகாலத்துக்கு கிடப்பில் போட்டு. அதை மீண்டும் நமக்கே அனுப்பி வைத்தது மாபெரும் துரோகம் எனவும் கூறினார். ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் முரணானது முற்றிலும் விரோதமானது என தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் விசிக மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள அனைத்து சக்திகளும் உறுதுணையாக இருக்கும் என கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல நம் நோக்கம் நுழைவுத் தேர்வே கூடாது என்பதே நிலைப்பாடு. நீட் தேர்வு என்பது மாநில அரசுத் திட்ட மாணவர்களுக்கு பெறும் சுமையானது எனவும் கூறினார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய எம்எல்ஏ பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை என விமர்சித்ததுடன், இதுவரை இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன என்றும் கூறினார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்லப்பெருந்தகை, குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. ஆளுநர் அனுப்பிய குறிப்பு தமிழ்நாடு மக்களை வேதனைப்படுத்தியுள்ளது எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் எத்தனையோ முதல்வரை பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஹை வோல்டேஜ் முதலமைச்சர். அவரை நீங்கள் நெருங்கவே முடியாது என்று எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த தீர்மானத்தின் மீது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க, மமக, மதிமுக, இடது சாரி கட்சிகள், விசிக, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.