சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், சென்னை உள்பட பல நகரங்களில் அரசே ஆங்கில மீடியம் பள்ளிகளையும் நடத்தி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் மற்றும் படிக்கும் மாணவர்கள் எப்படி கையெழுத்திட வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்ற பிறகு,  அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்பாக தற்போது பள்ளிகளிலும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணாக்கர்கள் என அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,கூறப்பட்ட விதிமுறைகளின்படி தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,  பள்ளிக்கல்வித் துறையில் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும். வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிட வேண்டும் மற்றும் மாணவ-மாணவிகளையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும். மேலும், டிபிஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயரைக் குறிப்பிடும்போதும், கையொப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்கும் முறையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். இதனையடுத்து கடந்த 2012 – 2013-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும், பாடங்களும் ஆங்கிலத்தில்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் தமிழில் கையெழுத்து என்ற உத்தரவு ஆங்கில வழி அரசு பள்ளிகளுக்கு பொருந்துமா என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.