தலித் மக்கள் உட்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறது கேரள அரசு. பலகாலம் முன்பாகவே தமிழகத்தில் இது குறித்து வலியுறுத்தப்பட்டதோடு, இதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இந்த நடவடிக்கை களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வந்தன.
இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் தடையில்லை என்று தீர்ப்பளித்தது.
இப்படி நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பிராமணர்களே. இந்த நிலையில் தற்போதைய கேரள அரசின் நடவடிக்கை குறித்தும், தமிழகத்தி லும் இதே போல அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும்… வழக்கு தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பிராமணர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், தமிழக பஞ்சாயத்து தேர்தல் குழுவின் தலைவருமான அமெரிக்கை நாராயணனை தொடர்புகொண்டு பேசினோம்.
அனைத்து சாதியினருக்கும் பூணூல் அணிவிக்கும் நிகழ்வை நடத்தப்போவதாக அறிவித்ததோடு, அதற்கு முன்வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒருவருக்கு பூணூலும் அணிவித்தவர் அமெரிக்கை நாராயணன்.
தவிர, 1991 காலகட்டதில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள நாராயண சாமி தோட்டத்தில் மூன்று மற்றும் நான்காவது தெருக்களில் வசிக்கும் தலித்துகளுடன் வாழ்ந்தவர். அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா பெற்றுத் தந்தவர். மேலும், மயிலை சி.பி.ராமசாமி அய்யர் தெருவில் உள்ள முண்டக்கன்னி அம்மன் கோயிலுக்கும் பட்டா பெற்றுத்தந்து, உள்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலை நாட்டியவர்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று தற்போது தமிழகத்தில் (மீண்டும்) எழுந்திருக்கும் கோரிக்கை குறித்து அமெரிக்கை நாராயணன் என்ன சொல்கிறார்?
”கேரள அரசின் நடவடிக்கையை முழு மனதோடு வரவேற்கிறேன்.
இந்துக்களுக்கு முதன்மையான முதல் திருக்கோயில் திருவரங்கம்தான். அந்தக் கோயிலில் நடந்த புராண சம்பவத்தைச் சொல்கிறேன். திருப்பானாழ்வார் என்பவர், தன்னைத்தானே தீண்டத்தாதவர் என்று கருதிக்கொண்டு கோயிலுக்குள் வரத் தயங்கினார். காவேரி ஆற்றின் மறு கரையில் நின்றுகொண்டே அரங்கனை வணங்கிவந்தார். அவரை, “வா, என் கோயிலுக்கு” என்று அரங்கன் ஏற்றுக்கொண்டார். திருப்பானாழ்வார் மேல் பிராமணர் ஒருவர் எரிந்த கல்லால் அவருக்கு ஏற்பட்ட ரத்தத்தை தன்மேல் ஏற்படுத்திக்கொண்டார் அரங்கன்.
தங்களையே தீண்டத்தகாதவர் என்று நினைத்துக்கொண்டு தன்னை நெருங்காமல் இருந்தவர்களை அரங்கனே ஏற்றுக்கொண்ட போது வேறு யார் தடுக்க முடியம்?
சாதியின் பெயரால் எவரையும் தள்ளிவைப்பது இந்து – பிராமண தர்மம் அல்ல.
தமிழகத்தில் ஆகம விதிப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதிகளைச் சேர்ந்த 206 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். சாஸ்திரங்கள் அறிந்த பாரபட்சமில்லா குழு அமைத்து மேற்கண்டவர்களை நேர்முக தேர்வு செய்து, கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
“சாஸ்திரம் அறிந்த பாரபட்சமற்ற குழு அமைத்து..” என்று ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்தவர் என்பதாலேயே குறிப்பிட்ட வேலைக்கு ஒருவர் தகுதியானவர் ஆகிவிட மாட்டார். கணினி பொறியியல் படித்து தேறிவிட்டார் என்பதாலேயே எந்தவொரு கணி நிறுவனத்திலும் பணியமர்த்திவிட மாட்டார்கள். வேலைக்காண தகுதி இருக்கிறதா என நேர்முகத் தேர்வு நடக்கும். அதனால்தான் சொல்கிறேன். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரில் தகுதியானவர்களை நேர்முகத்தேர்வு வைத்து தேர்வு செய்ய வேண்டும்.
தவிர ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி விதிகள் இருக்கும். அந்த விதிகள், வழிபாடுகளுக்கு உகந்தவரா என்பதை ஆராய்ந்து இந்த பணி நியமனம் நடக்கவேண்டும். ( மீண்டும் சொல்கிறேன்.. நான் சொல்வது சாதி அடிப்படையிலான தகுதி என்பதல்ல.)
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் (முந்தைய) தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராமணர்கள் சிலர் வழக்கு தொடுத்தனர் என்பது உண்மையே. ஆனால் பெரும்பாலான பிராமணர்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை ஏற்கவே செய்வார்கள் என்பது என் கருத்து.
அதே நேரம், இந்த விசயத்தில் அரசியல் தலைவர்களின் கருத்து வருத்தமுறச் செய்கிறது. இந்த விசயம் குறித்து எல்லா அரசியல்வாதிகளும் இது குறித்து மேலோட்டமாகவே பேசுகிறார்கள். “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்” என்று பேசுகிறார்களே தவிர, “தலித்துகள் உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்” என்கிற வார்த்தை அவர்களிடமிருந்து வருவதில்லை.
உடனடியாக தமிழக அரசு, தலித்துகள் உட்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே இது ஜெயலலிதா அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட விசயம்தான். ஆகவே தங்களது “அம்மா”வின் விருப்பத்தை உடனடியாக ஆளும் தரப்பினர் நிறைவேற்ற வேண்டும்” என்று நம்மிடம் தெரிவித்தார் அமெரிக்கை நாராயணன்.