சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் (230ந்தேதி) கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சிவசங்கர், கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்த வருகின்றனர். ஆனால், பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து, அவர்கள் எளிதாக பேருந்து பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டாத தமிழ்நாடு அரசு, கோயம்பேட்டை காலி செய்து தனியாரிடம் தாரை வார்க்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்காக மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப்பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. பின்னர் கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பஸ்களின் புறப்பாடுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும், 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து இ.சி.ஆர். வழியாக செல்லும் பஸ்களும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும்.
மேற்கண்ட பஸ் இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பஸ்கள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்.
மேற்கண்ட தகவலின்படி மக்கள் பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தற்போது தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு 77 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு நடைமேடைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை தவிர 250 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், நாளை முதல் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்பட உள்ளது. சென்னை திரும்பும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பயணிகளின் வேதனை குறையும்.
[youtube-feed feed=1]