மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்ததுதெரிய வந்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினரின் அசத்தல் முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதல்வராக மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தினால் மகளிரின் சமூக பொருளா தார முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன. அதன்படி சுயஉதவிக் குழுக்கள் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
ஊரக ஏழை மக்கள் நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத் தைப் பெருக்கும் நோக்கில் மகளிர் சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகள் மற்றும் மிகவும் ஏழைகளை மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேறும் வகையில், லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி வறுமையிலிருந்து விடுபடச் செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த குழுவினருக்கு வங்கிகள் சலுகைகளுடன் கூடிய கடன் வழங்கி வருகிறது. இதனால், பல பெண்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்திச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், விமானப்பயணம் மேற்கொள்ள விருப்பப்பட்டனர். தங்களது கனவுகளை நனவாக்க எண்ணி அவர்கள் சிறுக சிறுக ஒரு வருடமாக பணம் சேர்த்து வந்தனர். இதையடுத்து, முதன்முறையாக இன்று மதுரை வந்து விமானத்தில் சந்தோஷத்துடன் பயணித்தனர்.