மதுரை,

மிழக அரசு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்துள்ளதால், அலங்காநல்லூர் பகுதி பதற்றமாக காணப்படுகிறது.

தமிழக அரசு இயற்றியுள்ள அவசர சட்டத்தை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாகி உள்ளது.

இந்நிலையில் அலங்காநல்லூரில் வாடிவாசல் திறக்கும், ஜல்லிக்கடு நடைபெறும், நானே தொடங்கி வைப்பேன் என்று முதல்வர் பன்னீர் அறிவித்தார். தற்போது மதுரையில் முகாமிட்டு உள்ளார்.

ஆனால், அலங்காநல்லூர் மக்களோ, வாடிவாசல் திறக்க விட மாட்டோம் என குடும்பத்தோடு போராடி வருகின்றனர்.

வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த வேலி, கேலரிகள் அமைக்க  வந்தவர்களை பொது க்களும், இளைஞர்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.  சவுக்கு மரம் ஏற்றி வந்த 5 லாரிகளை சிறை பிடித்தனர்.

கேலரி அமைக்கும் பணி மட்டும் குறைந்தது 8 மணி நேரம் ஆகும். இந்நிலையில் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டதால் கேலரி பணி துவங்கவில்லை.

நிரந்தர சட்டம் வரும் வரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாது, மேலும் நிரந்தரச் சட்டம் வரும் வரை நாங்கள் கலைந்துச் செல்ல மாட்டோம், எங்கள் போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதல்வர் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்குவார்  எனில் முனியாண்டி கோவில் காளைக்கு தான் முதல் மரியாதையை செய்து வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும்.

கிராமமே நிரந்தர சட்டம் வரும் வரை ஜல்லிக்கட்டு நடத்தப்பட மாட்டாது எனக் கூறும்போது யார் முனியாண்டி கோவில் காளைக்கு மரியாதையை செலுத்துவார்? எவ்வாறு வாடிவாசலில் எங்களை மீறி காளைகள் அவிழ்த்து விடப்படும்? என அலங்காநல்லூர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அருகிலுள்ள கிராம பொதுமக்களும் அலங்காநல்லூர் நோக்கி வருகின்றனர்.  ஜல்லிக்கட்டை தடுக்க மக்களும், போராட்டக்காரர்களும் அங்கு குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக அலங்காநல்லூர் பகுதி விடிய விடிய பதற்றமுடன் காணப்படுகிறது.

மேலும், அலங்காநல்லூர் வரும் சாலைப்பகுதிகளான,   காளவாசல், ஊமச்சிகுளம், வீரபாண்டி, பாலமேடு, தனிச்சியம் என அலங்காநல்லூர் செல்லும் அனைத்து வழிகளையும் முள், கற்களை குவித்து அடைத்து வைத்துள்ளனர்.

நேற்று இரவு  அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வீரவிளையாட்டுக்குழு தலைவர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள்  நேற்றிரவு 11 மணிக்கு மேல் வந்து அலங்காநல்லூர் பகுதி மக்களுடன் பேச்சு வார்த்தைக்கு முயன்றனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் அவர்களிடம்,  அவசர, அவசரமாக நடக்கும் ஜல்லிக்கட்டுவை நாங்கள் கேட்கவில்லை. நிரந்தர ஜல்லிகட்டு இல்லாமல் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாரில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வேறு வழியில்லாமல் அமைச்சர் மதுரை திரும்பினார். இதன் காரணமாக பதற்றம் கூடியுள்ளது.