டெல்லி: பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாக நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து,  இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.

நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாஜகவைச் சேர்ந்த நுபுர் ஷர்மாவுக்கு Mujahideen Ghazwatul Hind பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நுபுர் சர்மாவுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துதெரிவித்த நூபுல் சர்மா கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல,  டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது” என தெரிவித்து உள்ளது.

இதையடுத்து,  இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா  ஜூன் 6ஆம் தேதியிட்டு வெளியாகி உள்ள கடிதத்தில், “நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அதேபோல், பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், “அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா., எப்போதும் ஊக்குவிக்கும்.” என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.