டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்திருந்த அக்‌ஷய் குமார், “100 கோடி பேரின் ஆனந்தக் கண்ணீருக்கு நீங்கள் பொறுப்பு” என்று ட்வீட் செய்திருந்தார். இந்த டீவீட்டை கிண்டல் செய்யும் வகையில் நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் அக்‌ஷய் நடிப்பார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அக்‌ஷய் குமார், “நான் அவரது பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் மீம்கள் நகைச்சுவையாக இருந்தன. நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நீரஜ் சோப்ரா, தனக்கு இன்னும் பயோபிக் எடுக்கும் அளவுக்கு வயதாகவில்லை என்றும், தனது ஓய்வுக்குப் பிறகு எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.