லக்னோ:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தங்கள் கைவசம் இருப்பதாக பேசிய, மோடியின் வெட்கக்கேடான பேச்சுக்கு  72 ஆண்டு காலம்  தடை விதிக்க வேண்டும் என்று உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி பார்ட்டி தலைருமான அகிலேஷ் யாதவ் கொந்தளித்துள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது நாடு முழுவதும் தாமரை மலரும் என்றும், அப்போது,  மம்தாவிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவரை விட்டு விலகுவார்கள் என்று தெரிவித்தவர்,  இன்றைய நிலவரப்படி அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள்  தங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று கூறினார்.

மோடியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் கூறிய மம்தா, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒரு கவுன்சிலரைக்கூட மோடி இழுக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். மோடியின் அவதூறான பேச்சு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசி வரும் பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டுமென உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்  வலியுறுத்தியுள்ளார்.

இன்று லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ’நாட்டின் முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டிய பிரதமர் 125 கோடி மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்த பின்னர் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருப்பதாக மிரட்டுகிறார் என்றார்.

மேலும்,.  மோடியின் இத்தகைய கருப்புப்பண மனப்பான்மைக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு 72 மணிநேரம் மட்டுமல்ல; 72 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.