மும்பை

தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரசின் கடிகார சின்னத்தை அஜித் பவார் அணிக்கு அளித்ததால் சரத்பவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரத்பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் கட்சியை உடைத்து பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்களும் அவருடன் மந்திரி பதவி ஏற்றனர்.

எனவே 53 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாகச் செயல்பட்டு வந்தது. இதில் அஜித்பவார் அணிக்கு 41 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில். சரத்பவார் தரப்புக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்கள்மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

அஜித்பவார் நாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். மேலும் கட்சியின் பெயர், சின்னத்தை தங்கள் அணிக்குத் தர வேண்டும் என அவரது தரப்பு கோரியது. சரத்பவார் தரப்பு இதை எதிர்த்து பதில் மனுத் தாக்கல் செய்தது.

நேற்று இரவு தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் வழக்கின் முடிவை வெளியிட்டது. அதன்படி அஜித்பவார் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்து கட்சியின் பெயர், கடிகாரம் சின்னமும் அவரது அணிக்கே வழங்கப்படுவதாகத் தெரிவித்தது.

தேர்தல் ஆணையம் சரத்பவார் அணிக்கு புதிய கட்சி பெயரைத் தேர்வு செய்யச் சலுகை வழங்கி உள்ளது. இன்று (புதன்கிழமை) மதியத்துக்குள் கட்சியின் புதிய பெயர் குறித்த 3 விருப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

சரத்பவார் அணிக்குத் தேர்தல் ஆணையத்தின் முடிவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று சரத்பவார் அணியின் தலைவர் ஜிதேந்திர அவாத் தெரிவித்துள்ளார்.